Wednesday 12 November 2014

Naladiyaar Paadalgal


http://www.tamilkalanjiyam.com/literatures/pathinen_keezhkanakku/naaladiyar/naaladiyar14.html#.VGLqTWfsoep

Naaladiyaar-14

http://www.mayyam.com/talk/showthread.php?2397-Comments-on-Outlook-article-amp-other-TiS-criticisms/page3


Hope we all have read the:

kalvi karayila; kaRpavar naaL sila
mella ninaikkin piNi pala
theLLithin aaraaindhamayudaya kaRpavE
neerozhiya paalun kurugiRRerindhu

Education/Knowledge/Learning is boundless; Learners life is limited 
[in that life too] with lots of pains (distractions/health/routines);
[so] choose and learn the best [that suits you] like the swan separates water from milk.



குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
131

தலைமயிரைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல. மனத்தளவில் உண்மையாக நடந்துகொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம்.


இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
132

கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்; பிறர்க்குத் தருவதால் குறையாது; (கற்றவர்) புகழை எங்கும் பரவச் செய்யும்; (தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை.


களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோ ராயினும் சுற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப்படும்.
133

களர் நிலத்தில் உண்டான உப்பைச் சான்றோர், நல்ல நன்செய் நிலத்தில் விளைந்த நெல்லைவிட மேன்மையாகக் கருதுவர். அதுபோலக் கீழ்க்குடியிற் பிறந்தவர்களானாலும் கற்றறிந்தவராயின் அவர்களை மேலான குடியினும் உயர்ந்த இடத்தில் வைத்து மதித்தல் வேண்டும்.


வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற.
134

வைத்த இடத்திலிருந்து (மனத்திலிருந்து) பிறரால் கவர்ந்து கொள்ள இயலாது; தமக்குக் கிடைத்துப் பிறருக்குக் கொடுத்தால் அழிவதில்லை; மேலான படை வலிமையையுடைய மன்னர் சினந்தாலும் கவர்ந்து கொள்ள முடியாது. ஆதலால், ஒருவன் தன் மக்கட்குப் 'செல்வம்' எனச் சேர்த்து வைக்கத்தக்கது கல்வியே; பிற அல்ல!


கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.
135

கல்விகள் முடிவில்லாதன; ஆனால் கற்பவருடைய வாழ்நாட்கள் சில! சற்றுப் பொறுமையாக நினைத்துப் பார்த்தால் அந்தச் சில வாழ்நாட்களிலும் பிணிகள் பலவாக இருக்கின்றன. ஆதலால் நீரை நீக்கிப் பாலைப் பருகும் அன்னப் பறவையைப் போல அறிவுடையார், நூலின் தன்மைகளை அறிந்து நல்ல நூல்களையே கற்பர்.


தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்
அவன்துணையா ஆறுபோய் அற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல்.
136

படகு செலுத்துபவனைப் பழமையான சாதிகளில் கீழ்ச்சாதியைச் சார்ந்தவன் என இகழமாட்டார்கள் மேலோர்! நீ காண்பாயாக! அப்படகு ஓட்டுபவனின் துணைகொண்டு ஆற்றைக் கடப்பது போலாகும். நல்ல சாத்திரங்களைக் கற்ற கீழ்மகனின் துணைகொண்டு நூல் பொருளைக் கற்றல்.


தவலருந் தொல்கேள்வித் தன்மை உடையார்
இகலிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ
நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்து
உம்பர் உறைவார் பதி.
137

குற்றமற்ற, பழமையான நூற்கேள்வியுடையவராய், பகைமையில்லாதவராய், கூர்மையான அறிவுள்ளவராய் விளங்கும் கற்றோர் குழுவில் சேர்ந்து அளவளாவி மகிழ்தலைவிட இன்பம் உடையதாயின், அகன்ற வானத்தின் மேல் தேவர்கள் வாழும் திருநகரைக் காண முயல்வோம். (கற்றோருடன் சேர்ந்து பெறும் இன்பத்தை விடத் துறக்க இன்பம் சிறந்ததன்று.)


கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்புதின் றற்றே - நுனிநீக்கித்
தூரில்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமி லாளர் தொடர்பு.
138

ஒலிக்கும் கடலினது குளிர்ச்சி பொருந்திய துறையையுடைய வேந்தனே! கற்றறிந்தவா¢ன் நட்பு, நுனியிலிருந்து கரும்பைத் தின்பது போலாம். அதன் அடிப்பகுதியிலிருந்து தின்பது போலாம், நற்பண்பும், அன்பும் இல்லாதார் நட்பு.


கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.
139

பழமையான சிறப்பினையுடைய அழகிய பாதிரிப்பூவைச் சேர்ந்திருப்பதால் புதிய மண்பானையானது, தன்னிடத்தில் உள்ள தண்ணீருக்குத் தான் நறுமணத்தைக் கொடுத்து, அத்தண்ணீரையும் நறுமணமுள்ளதாக்கும். அதுபோல கல்லாரே ஆயினும் கற்றாரைச் சார்ந்து அவர்போல் நடந்தால் நல்லறிவு நாளும் உண்டாகப் பெறுவர். (புதிய மண்பானையானது பாதிரிப்பூவைச் சேர்தலால் தன்னிடமுள்ள தண்ணீருக்கு நறுமணம் தருவது போல, கல்லாதார்க்கும் கற்றவர் சேர்க்கையால் அறிவு உண்டாகும் என்பது கருத்து).


அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது
உலகநூல் ஓதுவ தெல்லாம் - கலகல
கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணையறிவார் இல்.
140

எல்லையற்ற கல்விகளுக்குள்ளே மெய்ஞ்ஞான நூல்களைக் கற்காமல் விட்டுவிட்டு, வெறும் உலக அறிவை மட்டும் தரும் நூல்களைக் கற்பதெல்லாம் 'கலகல' என்னும் வீணான சலசலப்பே யாகும்! இத்தகைய இவ்வுலக அறிவு நூல்களைக்கொண்டு பிறவியாகிய தடுமாற்றத்தைப் (துன்பத்தை) போக்கும் வழியை அறிபவர் எங்கும் இல்லை.

No comments:

Post a Comment